கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி பதவி வகித்தபோது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை மூலம், ரூ. 15 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என சமூக நலத்துறைச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், இந்திர குமாரி, அவரது கணவர் பாபு உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் இருந்ததால், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க: இரவோடு வந்த ஆட்சி இரவோடே மறைந்து போகும்: ஜயந்த் பாட்டில்