சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக வார இறுதியில் முழு ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. மேலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்திவருகிறது. தற்போது பள்ளி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு தடுப்பூசி போடும் பணியினைத் தீவிரப்படுத்தியுள்ளது. புறநகர் ரயில்களில் இரண்டு முறை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றை காட்டிய பின்பே பயணிகளுக்குப் பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
கட்டாய தடுப்பூசி சட்டவிரோதம் எனத் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கட்டாயப்படுத்தி தடுப்பூசி
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், "விரும்புவோருக்குத் தடுப்பூசி செலுத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்துவது சட்டவிரோதம்.
இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகத் தலைவர் இந்தத் தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே அரசு பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தக்கூடாது. தடுப்பூசி செலுத்தி பக்கவிளைவுகள் ஏற்படுபவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அரசு சார்பில் தருவதில்லை.
தமிழ் தேசிய பேரியக்கம் கண்டனம்
பரிசோதனை எலி போல மனிதர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்துவது கண்டிக்கத்தக்கது. பள்ளி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், மாணவர்களை கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.
இந்தத் தடுப்பூசி, மாணவர்களின் மரபணுக்களில் மாற்றம் செய்ய நேரிடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் வருகின்ற தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். கர்ப்பிணிகள் இந்த ஊசியைச் செலுத்திக்கொண்டால் பின்விளைவு ஏற்படும் என்று அறிவியல்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.
அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து நுங்கம்பக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்து, ஒரு மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை அபிராமி அஜித் பங்கேற்பு