இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த விசாரணை அமைப்பை மாற்றி, கடந்த 1963ஆம் ஆண்டு மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை தொடங்கி, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு, சாத்தான்குளம் தந்தை-மகன் சிறை மரணம் வரை பல்வேறு குழப்பமான மற்றும் தீர்க்க முடியாத வழக்குகளை திறம்பட விசாரணை செய்து முடித்து வைக்கும் அமைப்பாகவே சிபிஐ அமைப்பு உள்ளது.
மாநில அரசுகளுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாநில அரசே ஒரு வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கேட்கும்பட்சத்தில், சிபிஐ தனது விசாரணையை சம்மந்தப்பட்ட மாநிலத்தில் தொடரும். இதனால் சிபிஐ மீதான மதிப்பு என்பது இன்றளவும் அனைவராலும் ஏற்கக்கூடிய வகையில் உள்ளது.
எங்கே போனது 103 கிலோ தங்கம்?
இந்நிலையில், சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு, கடந்த 2012ஆம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்து. இதனடிப்படையில் சிபிஐ அலுவலர்கள் நடத்திய சோதனையில் தங்கக் கட்டிகள், நகைகள் என, மொத்தம் 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும், தங்கம் பறிமுதல் செய்த பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து பெற்ற 1,160 கோடி ரூபாயை ஈடுகட்ட பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அலுவலருக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்தத் தங்கத்தை எடை பார்த்தபோது, 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது, மீதி 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக்கோரி சிறப்பு அலுவலரான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சிபிஐ-க்கு இது ஒரு அக்னிபரீட்சை
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது சிபிஐ மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத காவலர் ஒருவரை நியமித்து விசாரணை நடத்தி, ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ அமைப்புக்கு இது ஒரு அக்னிபரீட்சை போன்றது என குறிப்பிட்ட நீதிபதிகள், தங்கம் எடை குறையும் உலோகம் அல்ல என்றும், இந்த மோசடியில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுவே முதல் முறை
50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகளை திறம்பட விசாரித்த சிபிஐ மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர் இளங்கோவனிடம் கேட்ட போது, "இந்தியாவிலேயே முதல் முறையாக சிபிஐ மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
சிபிஐ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தில் அனைவரும் சமம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு விசாரணை அமைப்பு மீது மற்றொரு விசாரணை அமைப்பு வழக்குப்பதிவு செய்ய தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டங்களே போதுமானது. இதற்கென சிறப்பு சட்டப்பிரிவுகள் தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.
என்ஐஏ.வுடன் இணைத்து விடலாம்
இதுகுறித்து ஓய்வு பெற்ற சிபிஐ அலுவலர் ரகோத்தமன் கூறுகையில், "103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் பல்வேறு இடங்களில் தவறு நடக்க வாய்ப்பு இருந்தாலும், வழக்கை விசாரித்த சிபிஐ அலுவலர்கள் கைப்பற்றப்பட்ட தங்கத்தை நீதிமன்றத்திடமோ அல்லது ரிசர்வ் வங்கியிடமோ ஒப்படைத்திருக்க வேண்டும்.
மாறாக, தவறு செய்த சுரானா நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையிலேயே வைத்தது மிகப்பெரிய தவறு. பிப்ரவரி மாதம் நடந்த முறைகேடு தொடர்பாக 10 மாதங்களாக சிபிஐ விசாரித்து வருவதை நீதிமன்றம் ஏற்காமல் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியானது. மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ விசாரணை அமைப்பு செயல்படுவதாக உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்ததை ஏற்று கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சிபிஐ உடனான தங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடங்கி பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வரும் சிபிஐ அமைப்பை கலைத்துவிட்டு, தேசிய புலனாய்வு முகமையுடன் சிபிஐ-யை இணைத்து விடலாம்" என்றார்.
சிபிஐ மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, இந்தியாவில் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை மீண்டும் உரக்க சொல்லியிருப்பதாகவேப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 'ஜீரோ வையலேசன் ஜங்ஷன் திட்டம்' அறிமுக