சென்னை: பெருநகரமான சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, சர்வதேச தரத்துக்கு உயர்த்திடும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கடந்த 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், மயானம் உள்ளிட்டவற்றை கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 16 பள்ளிக்கட்டடங்கள், புராதன சின்னமான விக்டோரியா பொதுக்கூடத்தை பாதுகாத்து புனரமைக்கும் பணி ஆகிய 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.