சென்னை புறநகர்ப் பகுதியில் பல்லாவரம் மிக முக்கியமான பகுதி ஆகும். இந்தப் பகுதியில் காலை, மாலை நேரங்களில் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதே வழக்கமாக இருந்தன. இந்தப் பகுதியில் அவசர சிகிச்சைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறியுள்ளன.
இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் பகுதியிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்தனர். பல்லாவரத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ப. தன்சிங் பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான இந்த மேம்பாலப் பணிகளை குறித்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி இந்தத் திட்டத்திற்காக 2016ஆம் ஆண்டு 80.74 கோடி செலவில் பல்லாவரத்தில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு பல்லாவரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
கடுமையான போக்குவரத்து நெரிசல், தொடர்மழை , மணல் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை என எண்ணற்ற தடைகளைக் கடந்து தற்போது 1.53 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலப் பணிகள் முடிந்து இன்று (செப் 17) திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலமானது, ரேடியல் சாலை மேம்பாலத்தைக் கடந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்னை விமான நிலையம் வரை செல்கிறது. மூன்று வழிகள் கொண்ட இந்த மேம்பாலமானது திறக்கப்பட்டால் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எளிதாக பல்லாவரத்தைக் கடந்து செல்ல முடியும். இனி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை.
அதுமட்டுமல்ல தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், அதனை சரி செய்வதற்காக அங்கே ஒரு மேம்பாலம் ரூபாய் 55 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு மேம்பாலங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மேம்பாலம் திறந்து வைத்துள்ளார். இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.