சென்னை: மாண்டஸ் புயல் (Mantus Storm) தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மேலும் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக, இதுவரையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 2:50 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6:50 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதைப்போல் இன்று மாலை 6:20 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஆகிய 4 விமானங்களும் ரத்து என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே இலங்கை, தூத்துக்குடி, கடப்பா, மும்பை உட்பட 7 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த 4 விமானங்களும் ரத்தாகி உள்ளதால், இன்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், குறிப்பாக இன்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் மோசமான வானிலை நிலவும் அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வரும் விமானங்களை சென்னையில் தரையிறங்க செய்யாமல் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் தரை இறங்க செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதோடு, அந்த விமான நிலையங்களுக்குத் தகவல் கொடுத்து சென்னையிலிருந்து வரும் விமானங்கள் தரை இறங்குவதற்கு ஃபே எனப்படும் நடைமேடைகளை தயாராக வைத்திருக்கும் படியும் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று இரவு வரையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி