சென்னை: மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மொரிஸ்வா் பாடீல், நேற்று (ஜூலை 8) இரவு மதுரையில் இருந்து 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மதுரையிலிருந்து சென்னை நோக்கி இரவு 7 மணிக்கு வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலதாமதமாக இரவு 8.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இருப்பினும் உடனடியாக அமைச்சரை சென்னை விமான நிலைய செக்யூரிட்டி பிராஞ்ச் காவல்துறையினர், மும்பை செல்லவிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் கவுண்டருக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அலுவலர்கள், ‘போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துள்ளீா்கள்’ என்று கூறி அமைச்சரின் பயண முன்பதிவை ரத்து செய்தனர். இதனையடுத்து மத்திய இணை அமைச்சா் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள விவிஐபி லவுஞ்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணச்சீட்டு மாற்றப்பட்டு, அந்த விமானத்தில் அமைச்சா் மும்பை புறப்பட்டுச் சென்றாா். மேலும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் குறிப்பாக மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், விஜயவாடா, சீரடி போன்றவை அடிக்கடி தாமதம் ஆகின்றன.
இதனால் இணைப்பு விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள், விமானங்களை பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா். சமீப காலமாக இதனைப்போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விமானங்கள் தாமதத்திற்கு என்ன காரணம் என்பது பற்றியோ, விமான தாமதம் பற்றியோ பயணிகளுக்கு விமான நிலையத்தில் எந்தவிதமான முறையான அறிவிப்பும் அறிவிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்காக கூலிப்படையாக மாறிய பெண்... காதலிப்பது போல நடித்து கொலை..!