சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை வழங்கினார்கள்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாகக் கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.
அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு, விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினர்.
இந்நிகழ்வின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதின், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருமான ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!