சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 07) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை ஏற்று பட்டங்களை வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் 313 இளங்கலை பட்டமும், 51 முதுகலை பட்டமும், 22 முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் 297 மாணவர்களும், முதல் மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுகளுடன் பதக்கங்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். இளங்கலைப் பட்டப்படிப்பில் 14 பதக்கங்களை ஐஸ்வர்யா என்ற மாணவி பெற்றார். அவரின் தந்தை ஜெயபால் மீனவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதுகலைப் பட்டப்படிப்பில் கமலி என்ற மாணவி 6 பதகங்களைப் பெற்றுள்ளார்.
இது குறித்து 14 பதக்கங்கள் பெற்ற மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், “பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றதால் எனக்கு 14 பதக்கங்கள் கொடுத்துள்ளனர். எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனது தந்தை மீனவராக உள்ளார். நான் இத்துனை பதக்கங்கள் பெற்றதற்கு எனது ஆசிரியர்கள் தான் காரணம். அவர்கள் என்ன கற்பித்தார்களோ அதனை உள்வாங்கி படித்தேன் அதன் காரணமாக தான் என்னால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. தற்போது (ICAR-Central Institute of Fisheries Education) மும்பையில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வருகிறேன். அதன் பிறகு பிஎச்டி பயில உள்ளேன்” என தெரிவித்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் முதன்மை விருந்திநராக பங்கேற்று சிறப்புரையாற்றி பேசினார். அபோது அவர் பேசுகையில், “அதிக புரதச்சத்துகள் உள்ள உணவு மீன் உணவுகள் தான். இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் சார்ந்த தொழிலில் உள்ளனர். உலகளவிலான மீன் உணவுத் தேவையில் 8 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. மீன்வள ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நமக்கு போட்டியாக ஈக்குவாடர் என்ற சிறிய நாடு உள்ளது.
பிரதமரின் எண்ணம்படி நம் உற்பத்தி பல நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகளுக்கு அதிகளவில் மீன் ஏற்றுமதியை நாம் செய்து வருகிறோம். இந்தியாவில் மனித வளம் சிறப்பாக இருப்பதால் தான் பல நாடுகளிலும் நாம் சிறப்பான பதவிகளை பிடித்து வருகிறோம். இதற்காகத் தான் புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் மீன்வளத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகிறது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மீன் வள துறையில் 38ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
1950 முதல் 2014 வரை 55.79 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. 2014 க்கு பிறகு 162.48 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 174 லட்சம் கோடி டன் மீன்வள பொருள்கள் கையாளப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் மீன் வளங்களை ஏற்றுமதியில் ஒரு லட்சம் கோடியை அடைவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மீன் வளத்துறையில் 400 புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய தொழில்களையும் இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, “வரும் கல்வி ஆண்டிலிருந்து டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும். அதற்கான நிதியை வைப்பாக அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!