இணையதளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து துறைகளும் இணையதளங்கள் மூலமாக தங்களது சேவையை தொடங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, சென்னை காவல்துறை அறிமுகப்படுத்திய சிசிடிவி, காவலன் செயலி போன்றவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் 'தீ' என்ற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகபடுத்தியுள்ளனர். பொதுமக்கள் தீ செயலியை பிளே ஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து தங்களது பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டால் போதுமானது.
தீ ஏற்பட்டால் செயலியின் திரையில் தோன்றக்கூடிய உதவி என்ற பட்டனை அழுத்தினால் போதும் 5 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக உதவி பட்டனை அழுத்தினால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று ஜிபிஎஸ் மூலமாக முகவரியை கண்டறிந்து, உடனடியாக அருகிலிருக்கக்கூடிய தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதுமட்டுமின்றி உதவி பட்டனை அழுத்தியவுடன் பயனர்களின் செல்போன் எண்ணுக்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டு தீயின் நிலை குறித்து கேட்டறிந்து துரிதமாக செல்ல உதவி புரிகிறது.
தீ விபத்து மட்டுமில்லாமல் வெள்ள பாதிப்பு, சுவர் இடிந்து விபத்து, ஆழ்துளை கிணறு, விலங்குகளை மீட்பது போன்ற ஆபத்து காலங்களில் தீ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இது விபத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவும் பயன்படும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, தீயணைப்பு துறையினரை அழைக்க 101 எண் இருந்து வந்த நிலையில், தற்போது தீ செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.