சென்னை: மலேசியாவை தலைமையிடமாக கொண்டு ஹிஜாவு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம், ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்துள்ளது. இதை நம்பி ஏராளமானோர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தனர். ஆனால், இந்நிறுவனம் உறுதி அளித்ததைப் போல், பணத்துக்கு வட்டியை தரவில்லை எனப் புகார் எழுந்தது. மேலும் முதலீடு செய்த தொகையையும் தராமல் ஏமாற்றியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நவம்பர் 3-ம் தேதி, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹிஜாவு நிதி நிறுவன உரிமையாளர்களான சவுந்திரராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் உள்ளிட்ட 21 நிர்வாகிகள், 10,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்நிறுவனத்தில் ஏஜென்ட்களாக பணியாற்றி ரூ.500 கோடி மோசடி செய்ததாக குரு, மணிகண்டன், முகமது ஷெரீப் மூவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவேற்காட்டை சேர்ந்த சாந்தி, அண்ணா நகரை சேர்ந்த சுஜாதா, விருகம்பாக்கம் கல்யாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் 2,835 பேரிடம் ரூ.235 கோடியை மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சவுந்திரராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் ஆகியோரை தேடப்படும் குற்றவாளியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் ஹிஜாவு நிறுவன உரிமையாளர் சவுந்திரராஜன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் காப்பகம் வழக்கு: விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!