சென்னை: நகர்ப்புறக் குடியிருப்புகளில் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த திரைப்பட விழாவை மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதற்காகப் பல்வேறு தலைப்புகளில் திரைப்படங்களை கோரி, உலக நாடுகளுக்கு கடந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 150 திரைப்படங்கள் வரப்பெற்றுள்ளன. இந்நிலையில் அதில் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து, நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் திரையிட திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலாக டெல்லியில் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்பட விழா நாளை சென்னையில் தொடங்குகிறது. மேலும், நகரங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய பரந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நகர்ப்புற மேம்பாடு குறித்த உரையாடலில் பொதுமக்களை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்துத் துறையில் ரூ.2000 கோடி ஊழல்... திமுக பைல்ஸ் பார்ட் 2... வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், "நகர்ப்புற காலநிலை திரைப்பட விழா சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் இணைந்து நடத்துகிறது. இந்த விழா சென்னையில் நாளை(ஜூலை27) முதல் சனிக்கிழமை (ஜூலை 29) வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை நகர்ப்புற காலநிலை தொடர்பான 10 நாடுகளைச் சேர்ந்த 16 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் பங்கேற்க விரும்புவோர் https://citiis.niua.in/event/urbanclimatefilmfestival என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கவுள்ள இத்திரைப்பட விழாவின் முடிவில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், தமிழ்நாடு முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிரஜ், ஆவணப்பட இயக்குநர் முரளி கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் சோனியா எலிசெபத் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
காலநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஐ.நா-வின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையே இயங்கும் குழு (IPCC) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. உலக வெப்பமயமாவதால் மனித குலம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்துகள் குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாது என IPCC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் தொடங்கி உலக அளவில் அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே நகர்ப்புறங்களில் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், பாதிப்புகள் குறித்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: Tiruvallur - சேறும் சகதியுமாக உள்ள சாலை - சீரமைக்கக்கோரி சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டம்!