சென்னை: பழங்களின் மீது முதலீடு செய்த நிறுவனத்தை நம்பி பல கோடி ரூபாயை இழந்துள்ளதாக இயக்குநர் இன்று (31.07.2023) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூதுரை பொய்யாமொழி. இவர் ஒரு திரைப்பட இயக்குநர். இவர் ‘அலாரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து அவரிடம் விசாரிக்கையில் அவரது நண்பர் ஒருவர் T&G என்ற முதலீட்டு செயலியின் லிங்கை அனுப்பியதாகவும், அந்த செயலியை மூதுரை பொய்யாமொழி டவுன்லோடு செய்து அதில் அக்கவுண்ட் துவங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த செயலியில் ஆப்பிள், பலாப்பழம் என பல வகையான பழங்களின் பெயரில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக 537 ரூபாய்க்கு ஆப்பிள் பழத்தின் மீது முதலீடு செய்தால், தினந்தோறும் 150 ரூபாய் எனவும், மாதந்தோறும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே போல 1 லட்சம் ரூபாய் வரை பழங்களின் மீது முதலீடு செய்யலாம் என பல சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தாங்கள் செய்யும் பண முதலீடுகளை வெளிநாட்டில் உள்ள பெரிய பழ நிறுவனங்களின் மீது முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களுக்கு பணம் கொடுப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி, அதில் வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் மூலம் தொடர்ச்சியாக சலுகைகள் குறித்து ஆசை வார்த்தைகளை கூறி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி முதற்கட்டமாக 537 ரூபாய் கொடுத்து ஆப்பிளில் முதலீடு செய்ததாகவும், பின்னர் சரியான முறையில் பணம் வந்ததால் மேலும் 78,000 ரூபாய் கொடுத்து பலாப்பழத்தில் முதலீடு செய்ததாகவும் அவர் கூறுகிறார். இதையடுத்து மூன்றே நாட்களில் 5,500 ரூபாய் வரை வருமானம் கிடைத்ததால், 3 லட்சம் ரூபாய் வரை இந்த செயலியில் முதலீடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சரியான முறையில் பணம் வராததால் இது குறித்து நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அந்நிறுவனம், இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் விடுமுறை எனவும், பேக் ஐடி (fake id) அதிகமாக செயலியில் உள் நுழைந்து விட்டதாக கூறி அலைக்கழித்து வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் செயலி அனைத்துமே இயங்காமல் போனதால் தான் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
தன்னை நம்பி தனது நண்பர்களும் 1 கோடி ரூபாய் வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடியில் சிக்கி இருப்பதாகவும், இதே போல இந்நிறுவனம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: Haryana clash: மத ஊர்வலத்தில் வன்முறை.. காவலர் உயிரிழப்பு.. இணைய சேவைகள் முடக்கம்!