சென்னை: கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க கோரி சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை எந்த கோயில் விழாக்களும் நடத்தப்படவில்லை எனவும் , ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, விழாக்கள், பண்டிகைகள் அர்ச்சகர்களின் முடிவுப்படி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், கோயில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க அர்ச்சகர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும், கோயில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயிலில் ஊரடங்கு காலத்தில் நடத்தப்படாத விழாக்கள் குறித்தும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நடத்தப்பட்ட விழாக்கள், உற்சவங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: தொடர் மழை: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை!