சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி, கபாலி தெருவை சேர்ந்தவர் ராஜ் பாலாஜி (வயது 15). பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அவதிப்பட்டு வந்த ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாணவனின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன் ராஜ் பாலாஜி சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 30) உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ராஜ் பாலாஜிக்கு காய்ச்சல் சற்று சரியான நிலையில் உடலில் உப்பு அதிகமாக இருந்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்" என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், காய்ச்சலில் இருந்த சிறுவன் ராஜ் பாலாஜியின் சிறுநீரகம் செயல் இழந்து உயிர் இழந்ததாக சான்று வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறைந்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிர்யிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் குழந்தை திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!