சென்னை பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், ஒன்றாது தெருவில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் ஆணையர், துணை ஆணையரிடம் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
13 பேர் கைது
இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் சூதாட்டம் நடந்த இடத்தில் சோதனையிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். அதில், இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் தப்பியோடிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் பிடித்து பீர்க்கன்கரணை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிணையில் விடுவிப்பு
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பத் (58), ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் மூர்த்தி (59), பொன்னுசாமி (56), அருள்ஜோதி (50), பிரபுதாஸ் (42), கிருஷ்ணன் (45), புருஷோத்தமன் (27), ஜெயக்குமார் (48), ராஜா (45), செல்வராஜ் (69), ராஜ்குமார் (30), தங்கராஜ் (53), சங்கர் (42), கிருஷ்ணன் (43), வெங்கடேஷ் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 15 பேர் மீதும் சட்ட விரோத சூதாட்டம் விளையாடியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காவலர்
கடந்த இரண்டு மாதங்களாக இந்த வீட்டில் சூதாட்டம் நடைபெற்றதாகவும், அது பீர்க்கன்கரணை காவல் ஆய்வாளருக்கு தெரிந்தே நடைபெற்றதாக காவல் துறை உயர் அலுவலர்களுக்கு தெரியவரவே, இது குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சூதாட்டத்தை தடுக்க வேண்டிய காவலரே சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டு, காவல் துறையிடம் சிக்கிய சம்பவம் காவலர்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு தடை உத்தரவால் முடிவுக்கு வருமா ஆன்லைன் சூதாட்டம்?