சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று(டிச.21) பகல் 12 மணியளவில், செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்ணின் உடமைகளையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்வதற்கு முன்பு அந்த பெண் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததும், பின் ரயில் வரும்போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, உயிரிழந்த பெண் கடலூர் மாவட்டதைச் சேர்ந்த ஹேமாவதி என்பதும், அவர் சென்னையில் தங்கி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
வழக்கறிஞரின் தற்கொலை தொடர்பாக குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சென்ட்ரல் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இளைஞர் வெட்டிப் படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு!