சென்னை: இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால் தான், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேரமுடியும். எனவே, உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
கண்காணிப்பு குழு
தமிழ்நாடு அரசு உடனடியாக, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணமான ரூபாய் 13,650 மட்டுமே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து அரசாணையை வெளியிட வேண்டும். இக்கட்டண நிர்ணயம், கறாராக நடைமுறைப் படுத்தப்படுகிறதா அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தில் தண்டனைகளைக் கடுமையாக்கிட உரியத் திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும்.
சிறப்பு மருத்துவப் படிப்பு
தேசிய மருத்துவ ஆணையத்தின் கடிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் முன்பு இருந்தது போல் தமிழ்நாட்டிற்கே வழங்கிட வேண்டும்.
காவி மயம்
மத்திய பாஜக அரசு மருத்துவக் கல்வியை 'காவி மயமாக்கி' வருகிறது. மருத்துவக் கல்வியில் இந்துத்துவ சித்தாந்தத்தை திணிக்கிறது. குறிப்பாக மதச்சார்பற்ற நவீன அறிவியல் மருத்துவத்தை (Modern Scientific Medicine) நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது.
நவீன அறிவியல் மருத்துவம் ஒரு மேற்கத்திய மருத்துவம், ஆங்கில மருத்துவம், கிறிஸ்தவ மருத்துவம், அந்நிய மருத்துவம் என்று புரிந்து கொண்டதுடன் அம்மருத்துவத்தை ஒழித்திட நினைக்கிறது. நவீன அறிவியல் மருத்துவம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ, எந்த ஒரு பண்பாட்டுக்கோ, எந்த ஒரு மக்கள் பிரிவினருக்கோ சொந்தமானது அல்ல.
இன்றைய நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு உலகளாவிய மருத்துவமாகும். சர்வதேச மருத்துவமாகும். அதன் வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.
மதச்சார்பற்ற மருத்துவர்கள்
மருத்துவத்தை இந்துத்துவா அடையாள அரசியலுக்கு, மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்த முனைகின்றனர். நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு மதச்சார்பற்ற மருத்துவமாகும். பண்டைய இந்திய மருத்துவரான 'சரகர்' திரிக்கப்பட்ட உறுதிமொழியை மதச்சார்பற்ற நவீன அறிவியல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல.
சரகர் உறுதிமொழியை இந்துத்துவா அடிப்படையில் மத்திய அரசு கையாள்கிறது. இது மருத்துவம் பயிலும் பல்வேறு சிறுபான்மை பிரிவினரின் உணர்வுகளுக்கும், மதச்சார்பற்ற மருத்துவர்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். இத்தகைய "இந்துத்துவ" கருத்தியலைத் திணிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
ஆராய்ச்சிப் படிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகளை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியம், ஃபிசியோதெரப்பி, மருந்தியல், துணை மருத்துவப் படிப்புகள் போன்ற பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் என பல்வேறு படிப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்குப் படிக்கின்றனர்.
மக்கள் நலனுக்கு எதிரானது
சென்னை மருத்துவக் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ,அனைத்து அரசு இடங்களையும் ஆய்வு செய்து, புதிய இடங்களைத் தேர்ந்தெடுத்து இயன்ற வரை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விரிவாக்கத்துப் பயன்படுத்த வேண்டும்.
சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை, உயர் சிறப்பு மாணவர்களுக்கான விடுதியை வேறு இடத்திற்கு மாற்றவும் அவ்விடத்தை மருத்துவம் சாரா வேறு துறைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய முயற்சிகள் மக்கள் நலனுக்கு எதிரானது. அம்முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை - எடப்பாடிக்கு உதயநிதி பதில்