சென்னை: சென்னை மூர் மார்க்கெட் வளாகம் முன்பு தென்னக ரயில்வே மண்டலத்தின் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் கோட்டத்தைச் சேர்ந்த லோகோ பைலட்கள் மற்றும் உதவி லோகோ பைலட்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச வார ஓய்வாக 40 மணி நேரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,இன்று (அக்.10) அகில இந்தியா லோகோ ரன்னிங்க் ஸ்டாஃப் அஸோஸியேஷன் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் நிர்வாகி பாலசந்தர் கூறுகையில், “1973ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மத்திய அரசால் லோகோ பைலட்கள் வேலை நேரம் 10 மணி நேரத்திற்கு மேல் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரயில்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளதாலும், பல வழித்தடங்களில் வேகம் அதிகரிக்கப்பட்ட சூழ்நிலையாலும், தற்போது வேலை நேரம் 14,15 மணிநேரமாக நடைமுறையில் உள்ளது.
மேலும் வேகம் அதிகப்படுத்தப்படுவதால், 2-மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் 1 மணி நேரத்தில் இருந்து 1.30 மணி நேரத்தில் செல்கிறோம். இதனால், எங்களுக்கு மன அழுத்தம் மற்றும் வேலை அழுத்தம் அதிகரித்துள்ளது. இன்றுவரை வேலை நேரம் 12 மணி நேரம் சட்டமாகவும், நடைமுறையில் 14,15 மணிநேரமாகவும் உள்ளது. இவ்வளவு நேரமும், ஒரே லோகோ பைலட் ரயிலை இயக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறோம்.
இதனால், பயணிகள் ரயில் வேலை நேரத்தை 6 மணி நேரத்திற்கும் மற்றும் சரக்கு ரயில்கள் வேலை நேரத்தை 8 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கைகாக இருந்து வருகிறது. மேலும் குறைந்தபட்ச வார ஓய்வாக 40 மணி நேரம் இல்லாமல் எந்த சட்டமும் இருக்க முடியாது. ஆனால் லோகோ பைலட்களுக்கு மட்டும், வார ஓய்வாக 22 மணி அல்லது 30 மணி நேரம் மட்டும் வழங்கப்படுகிறது.
இதனால் எங்கள் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும், ஓய்வையும் குறைத்து விட்டு, இரவு நேர பணிக்கு இரண்டு நாட்கள் பார்க்கிற நிலை உள்ளது. ஒரு லோகோ பைலட்-க்கு உடல்நலம் என்பது மிக முக்கியமானதா இருக்கிறது. உடல்நலம் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து ரயிலை எங்களால் இயக்க முடியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், ரயில்வே அரசாங்க நிறுவனமாக தொடர வேண்டும், இடமாறுதல் கோரியவர்களை காலதாமதமின்றி பரிசீலிக்க வேண்டும், ரயில்வே வாரியம் ஒரே மாதிரியான இடமாறுதல் கொள்கை அமல் படுத்த வேண்டும் மற்றும் பெண் லோகோ பைலட்கள் வேலை சூழ்நிலையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டாம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்