சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறைச்செயலரை, விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாராயணசாமி சந்தித்து மனு அளித்தார். பின்பு நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளம், கம்பு, திணை உள்ளிட்ட தானியப்பயிர்களுக்கும் இஞ்சி, பூண்டு, தேங்காய் உள்ளிட்ட பயிர்களுக்கும் என்றும் இல்லாத அளவு செஸ் வரியைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. குவிண்டாலுக்கு 30 ரூபாய் வரை வசூலிக்கப்படும் இந்த செஸ்வரியால் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் கோடிக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்' எனத் தெரிவித்தார்.
'2008ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் செஸ் வரி கொண்டுவரப்பட்டுக் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் செஸ் வரியை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும் பயிர்க்காப்பீட்டில், பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. 2020-21ஆம் ஆண்டில் கடும் மழையால் விருதுநகர் மாவட்டம், பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அருப்புக்கோட்டை தாலுகாவில் பயிர்க்காப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் தருகின்றன. எனவே, நியாயமான பயிர்க்காப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி கோரிக்கை வைத்தார்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுக்கும் பட்சத்தில் வரும் ஜூலை 5ஆம் தேதி சென்னையில் 5000 விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஞ்சலோ மோரியோண்டோ; ஃகாபி மிஷின் தந்தைக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்