சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.பாலகிருஷ்ணன் மகன் சோ.பா.ரவி , பாதிரியார் தாமஸ், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகி உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை ஆரம்பிக்கும் போதே திருக்குறளோடு ஆரம்பித்தார். பிரதமர் எங்கு பேசினாலும் சங்கத் தமிழ் இலக்கியங்களையோ திருக்குறளையோ மேற்கொள் காட்டிவருகிறார்.
தமிழர் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாடு சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாகவுள்ளது. எனவே, தமிழக சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு மிகமிக அவசியம் என்பதால், சாலை வசதிக்காக தமிழ்நாட்டிற்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், மதுரையிலிருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், தொழில்துறையினரும் பயன் பெறுவர்கள்.
சேலம் - சென்னை நெடுஞ்சாலையால் துறைமுகத்திற்கு பொருள்களை எளிதாக எடுத்துச்செல்லமுடியும். சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, சென்னை மெட்ரோக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தின் மீதான வரி 12.5% லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள தங்க நுகர்வோர்கள் அதிகளவில் பயன்பெறுவர். தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். கடல்பாசிக்கான சிறப்பு பூங்கா அமைக்கப்படுவதும் அவர்களுக்கு பெரியளவில் பயனளிக்கும். பெட்ரோல் டீசல் விலையை அரசு கருத்தில் கொண்டுள்ளது.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட இது மிகவும் நல்ல பட்ஜெட். அவரால் இது போன்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத காரணத்தால் இவ்வாறு பேசுகிறார். உண்மையான எதிர்க்கட்சி தலைவர், நல்ல பட்ஜெட்டாக இருக்கும் போது பாராட்டவேண்டும். ஆனால் இங்குள்ளவர்கள் அரசியலுக்காக குறைகூறிவருகின்றனர்.
தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. தமிழ்நாடு பாஜக நேர்மையான கட்சி என்பதால் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். இங்கு சிலர் மதக் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அவர்களை காவல்துறை கண்டறிந்து கைது செய்யவேண்டும். எங்களைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் ஒன்று தான்.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் திட்டமிடப்பட்ட போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா எனப் பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படாத நிலையில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ளவர்களால் மட்டும் இந்தப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், சசிகலா வருகையால் தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர் வரட்டும் பின்னர் பார்க்கலாம் எனப் பதிலளித்தார்.