உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை மதித்து அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி அய்யாகண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கம் அருகே அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, "விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாநில அரசு அதனை செயல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
மேலும், "கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபடும் எங்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுகின்றனர்" என்றார்.
கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சி வீரப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மயக்கமடைந்ததால், அவரை காவல் துறை வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: 'வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!