மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகே
அகில இந்தி விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இது குறித்து கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மோடி அரசு நிறைவேற்றியிருக்கிற விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் விவசாய விரோத மசோதாக்களை, வாபஸ் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு விரோதமான இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்காமல் நாடாளுமன்ற விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் சர்வாதிகாரத்தனமாக இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றனர்.
இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நல்லது என்றால் ஏன் நாடாளுமன்ற விதிமுறைகளை மத்திய அரசு கடைப்பிடிக்கவில்லை, எதிர்க்கட்சிகளின் குரல்களை ஏன் கேட்கவில்லை, திருத்தங்களை முன் மொழிவதற்கும் ஏன் அனுமதிக்கவில்லை, குரல் வாக்கு மூலம் ஏன் இந்த மசோதாவை நிறைவேற்றினார்கள். இதையெல்லாம் பார்த்தால் இந்த சட்டம் முழுக்க முழுக்க தேசவிரோத சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமான சட்டமாகும்.
மணிக்கு ஒரு முறை, தான் ஒரு விவசாயி என்று கூறுகிற தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி, இந்தச் சட்டங்கள் நல்லது என வழிமொழிந்து இருக்கிறார். எடப்பாடி வீட்டில் இருப்பவர்கள் யாரும் இதை நல்லச் சட்டம் என்று சொல்வார்களா. இந்தச் சட்டத்தில் கூறியிருக்கக் கூடிய அம்சங்கள் என்னவென்றால், ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாப் பொருள்களையும் வாங்கி எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம், அதற்கு எல்லையும், கிடையாது வரம்பும் கிடையாது.
இதனால், அவர்கள் சொல்கிற விலைக்கு தான் நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும். பற்றாக்குறை நிலையை உருவாக்கி அவர்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். எனவே இப்படிப்பட்ட சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அதை வாங்கிய உன்னும் கோடிக்கணக்கான மக்களுக்கு விரோதமானது அதை எவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி நல்ல சட்டம் என்று கூறினார்.
அவருக்கு மோடியின் ஆதரவு வேண்டும், அவர் போடும் பிச்சையில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு விவசாயிகளை காவு கொடுக்க இந்த சட்டத்தை நல்லது என கூறுகிறார். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. வருகிற செப். 28-ஆம் தேதி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கட்சிகளுடன் அனைத்து கட்சிகளும் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த இருக்கிறோம். மோடி இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டங்கள் தொடரும். மோடி ஆதரவுக்காக, தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள், இரண்டும் இரண்டும் ஏழு என்று கூட கூறுவார்கள்.
இதையும் படிங்க: விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யாத ஆவின்: 200 லிட்டர் பாலை சாலையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!