சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறை சூடன் 1956 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். 1985ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ படத்தில் இடம் பெற்ற ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் பாடலாசிரியராக தடம் பதித்தார்.
தொடர்ந்து ‘மீனம்மா மீனம்மா’, ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் போன்ற பல்வேறு வெற்றிப் பாடல்களைக் கொடுத்து தமிழ் திரையுலைகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.
விருதுகளைக் குவித்த கவிஞர் மறைவு
இதுவரை ஆயிரத்து 400 திரைப் பாடல்களையும், 5 ஆயிரம் பக்திப் பாடல்களையும், 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கான பாடல்களையும் இயற்றியுள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு ’ராசாவின் மனசிலே’ பட பாடலுக்காகவும், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ’தாயகம்’ திரைப்பட பாடல்களுக்காகவும், தமிழ்நாடு அரசால் பிறைசூடனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இதே போல் இவருக்கு தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் "கலைச்செல்வம்" விருதும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கபிலர் விருதையும் தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்.8) உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்ட்ரியாவின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்