சென்னை: முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் அன்புசெல்வம்(39) இவர் விருகம்பாக்கம் சாலிகிராமம் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த விடுதிக்கு கடந்த 13 தேதி அன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் ஒருவர் அன்பு செல்வத்திடம் தான் உதவி ஆய்வாளர் எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்து, தங்களது விடுதி மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க மாதம் 30 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டிவிட்டு அங்கு இருந்து சென்றுள்ளார்.
மீண்டும் மறுநாள் காலை விடுதிக்கு சென்ற அந்த நபர் அன்புசெல்வம் சட்டைப்பையில் வைத்திருந்த 500 ரூபாயை மிரட்டி பிடிங்கிகொண்டு நான் கேட்ட 30 ஆயிரம் பணத்தை அருகில் உள்ள இடத்திற்குக் கொண்டு வந்து தருமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து விடுதியின் மேலாளார் அன்புசெல்வம் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதவி ஆய்வாளர் என்று கூறிய நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய பிரதாபன்(25) சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் என தெரியவந்தது. போலியான காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விடுதி மேலாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.
மேலும் இவர் மீது ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பணமோசடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து போலியான காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டை மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை - விருதுநகரில் 10 மாதங்களில் 11 பேர் மீது குண்டாஸ்