சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பானி வளாகத்தில் அமைந்துள்ள இ-ஜாப்ஸ் நிறுவனத்தை நிருபன் சக்கரவர்த்தி என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் மேலாளராக அருணா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தின் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் முப்பது நாட்களில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வேலை என்ற கணவோடு காத்திருந்த 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த நிறுவனத்தை நம்பி தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். இ-ஜாப்ஸ் நிறுவனத்தில் பணத்தைக் கட்டி வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியே இ-ஜாப்ஸ் நிறுவனம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்து பணத்தைக் கட்டி ஏமாந்த இளைஞர்கள் நிருபன் சக்கரவர்த்தி, நிறுவன மேலாளர் அருணா ஆகியோர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மேலாளர் அருணாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, பிணையில் வெளியே வந்த அருணா இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பாதிக்கப்பட்டோர் தவறுதலாக என் மீது புகார் அளித்துள்ளனர். இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் இ-ஜாப்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிக்கு சேர்ந்தேன். நிருபன் சக்கரவர்த்தி பலபேரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார். நான் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை.
தன்னுடைய வேலை நிர்வாகத்தை கவனிப்பது மட்டுமே. மோசடியில் ஈடுப்பட்டது பற்றி தனக்குத் தெரியாது. மோசடியில் ஈடுப்பட்ட நிருபன் சக்கரவர்த்தி உட்பட 3 பெண்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அருணா தெரிவித்தார்.