சென்னை: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கிளினிக் நடத்தி வந்த ராஜலட்சுமிக்கு, ஒருவர் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த புகாரில், ராஜலட்சுமி சார்பாக வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பான விசாரணையில், ராஜலட்சுமி ஒரு போலி மருத்துவர் என தெரிய வந்தது. வழக்கறிஞர் கலந்தர் ஆசிக், ராஜலட்சுமிக்கு ஆஜராவதை நிறுத்திக் கொண்டார்.
பின், போலி மருத்துவரிடம் பொய் புகார் பெற்றுக் கொண்டு வன்கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து வழக்கறிஞரை காவல்துறையினர் கைதும் செய்தனர்.
தன் மீது பதியபட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடர்ந்த வழக்கில், புகார் அளித்த போலி பெண் மருத்துவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் போலீசாரின் வற்புறுத்தலால் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக், மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசந்திரன், திருவாடனை டிஎஸ்பியாக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட ஆறு போலீசாரும் செப்டம்பர் 16ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'இலங்கை மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க அழுத்தம் தர வேண்டும்'