சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்கத் தனி அலுவலரின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாகத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு விசாரணையைத் தொடங்கியது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நடிகர் சங்கத்துக்கு தனி அலுவலராக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறபித்தாகவும், அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கரோனா பரவல் காரணமாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.
தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாகத் தேர்தலை நடத்தச் சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அலுவலர் கீதாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்றம் - நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!