சென்னை: சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இந்த சட்ட முன்வரைவிற்கு பாஜக ஆதரவு தெரிவிக்காதது, தமிழ்நாடு மாணவர்கள் நலனுக்கும், தமிழ்நாடு மாநில உரிமைகளுக்கும் எதிரான அதன் போக்கை காட்டுகிறது. இது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
அண்ணாமலை சொல்வது தவறு. கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் இந்த நீட் தேர்வால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் மற்றும் உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும்கூட தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுவார்கள் எனக் கூற முடியாது. தமிழ்வழி கல்வியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனக் கூற முடியாது. எனவே, தமிழ் வழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்திடவும் , தமிழ் வழியில் படிக்கும் மாணாக்கர்களுக்குத் தனி இட ஒதுக்கீடை மருத்துவக் கல்வியில் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்தக் கல்வி ஆண்டிலிருந்தே, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை பயின்ற மாணாக்கர்களுக்கு குறைந்தது 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டையாவது நடைமுறைப் படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் கடினமான மற்றும் மலைப் பகுதிகளில் வசித்து, அதே பகுதி பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடை மருத்துவப் படிப்புகளிலும், இதர தொழிற் படிப்புகளிலும், உயர் கல்வியிலும் வழங்கிட வேண்டும்.
எஸ்.சி,எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை 50 விழுக்காடு வீழ்ச்சி
SC/ST மாணவர்களுக்கான Post matric scholarship முறையாக வழங்கப்படவில்லை. அதை முறையாக வழங்கிட வேண்டும். கடந்த ஆட்சியில் இந்த உதவித் தொகை முறையாக கிடைக்காததால் ஏராளமான மாணவர்கள் படிப்பை தொடர முடியவில்லை. கல்லூரிகளில் சேர தயங்குகின்றனர்.
பொறியியல் படிப்புகளில் எஸ்.சி,எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை 50 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.எனவே, இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். இந்த உதவித் தொகையை அதிகரிப்பதோடு, இதைப் பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சபட்ச வரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும்
மாவட்டத் தலைநகரங்களிலும் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. எனவே, தேசிய தேர்வு முகமை, தமிழ்நாட்டில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பயிற்சி மையங்களை உடனடியாக தொடங்கிட வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் கல்லூரிகளை தொடங்குவதை விரைவுப் படுத்த வேண்டும். அந்நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள மாநிலங்களுக்கு கல்வியிலும் வேலையிலும் குறைந்த பட்சம் 65 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள குறைபாடுகளை, பிரச்சனைகளை சரி செய்திட மேற்கண்ட கோரிக்கைகளை மாநில, ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'5 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு' - அமைச்சர் பொன்முடி.