2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரானார்.
இந்தச் சூழலில், சோனியா காந்தி தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர அரசியலிலிருந்து விலகியிருக்க விரும்புகிறார் என்ற தகவல் பரவிவருகிறது. இதனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மறுத்துவருகின்றனர்.
இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே தலைவராக இருக்க வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில் இன்று காணொலி வாயிலாக தற்போது கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் சோனியா காந்தி தனது ஓய்வை அறிவிப்பார் எனப் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைமை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேரு குடும்பத்தின் தலைமை அல்லாத காங்கிரஸ் தலை இல்லாத உடலுக்குச் சமம். மதவாதத்தினை எதிர்ப்பதற்கு நமது நாட்டிற்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இன்றும் அடிப்படையாக இருப்பது நேரு குடும்பத்தின் அர்ப்பணிப்பு.
நேரு குடும்பத்தின் தலைமைப் பண்பு பற்றி கேள்வி எழுப்பும் சிலர் முதலில் அவர்களுடைய தகுதியை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
சோனியா காந்தி அகில இந்திய காங்கிரசின் தலைவராகவும், ராகுல் காந்தி செயல் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற தொண்டர்களின் விருப்பம்.
தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், நேரு குடும்பத்தின் தன்னலமற்ற நமது மாபெரும் நாட்டையும், கட்சியையும் வழிநடத்த முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரசுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற ராகுலின் கருத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உடன்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.