சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான ரத்தினம். இவர் மதுராந்தகம் பகுதியிலேயே உடற்பயிற்சிக்கூடம் ஒன்றினை நடத்தி வருகிறார். இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஆசிய அளவில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் பிரிவில் இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாலத்தீவில் நடைபெறவுள்ள மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து நமது 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' இணையதளம் விரிவான சிறப்புசெய்தித்தொகுப்பினை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் ரத்தினம் குறித்தான செய்தியை வெளியிட்டன.
இவ்வாறு செய்திகள் மூலம் இது பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, இன்று (ஜூன் 3) 72 வயது ஆணழகன் ரத்தினத்தை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!