சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநிலத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
மாநிலத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெறாது என்பதற்கான ஆதாரங்களை மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அமைச்சர்கள் ஒன்று கூடி பணம் விநியோகம் செய்ய உள்ளனர். ஒரு அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்கிறார். இன்னொரு அமைச்சர் 5,000 ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறார். முதலமைச்சரே தேர்தல் அலுவலர்களை சரிசெய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படும் ஆதாரங்களை மாநில தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளோம்.
அமைச்சர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு. அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஈரோடு கிழக்கில் உள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்றி புதியவர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான ஆதாரங்களை தற்போதே கொடுத்துள்ளோம். தேர்தல் முறையாக நடப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம். வேறு கட்சிகள் பணப்பட்டுவாடா செய்தாலும் அதற்கான ஆதாரத்தையும் திரட்டி தேர்தல் ஆணையரிடம் கொடுப்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: புது ரூட்டில் பயணிக்கும் ஈபிஎஸ்.. ஈரோடு கிழக்கு வியூகம் என்ன?