சென்னை: ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண்பது யார்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது ஓ.பி.எஸ். தரப்பு. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம் என்றார்.
எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு என்று கூறிய கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக முழுமையாக பாடுபடுவோம்" என கூறினார். இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி இந்த முடிவுக்கு வந்திருப்பதற்கான காரணம் குறித்து நேற்று (05.02.2023) அன்று ஈடிவி பாரத் முழுமையான செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.
மேலும் படிக்க: Erode East By Election: ஓபிஎஸ் அதிரடி முடிவின் பின்னணி என்ன..?
எதிர்பார்த்தது போன்றே ஓ.பி.எஸ். தரப்பு வாபஸ் முடிவை எடுத்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த நிகழ்வுகளைக் காணலாம். 2021 தேர்தலில் காலமான திருமகன் ஈவேராவை எதிர்த்து த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்டிருந்த நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட முடிவானது. மேலும் அதிமுகவில் ஈபிஎஸ் தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பிலும் பாஜகவை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கோரினர்.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி என்பதால் இந்த இடைத்தேர்தலை அதிமுக சந்திக்கும் என்றும், இடைத்தேர்தலில் பாஜக தனது பலத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கும் வகையில் தனித்தனியாக பணிக்குழுவையும் அமைத்தனர். மேலும் ஈபிஎஸ் தரப்பில் ஜன.,27-ம் தேதி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனால் சின்னம் கிடைக்காவிட்டால் ஈபிஎஸ் அணி தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே சுயேட்சை சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால் தங்களின் ஆதரவு இல்லை என பாஜக கறாராக தெரிவித்தது.
உட்கட்சி பிரச்னை, பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு, சின்னத்திற்கு பிரச்னை, இடைத்தேர்தலில் ஆளும்கட்சியே வெல்லும் என்கிற நிலை என இந்த இடைத்தேர்தலில் அதிமுக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த பிப்.,1-ம் தேதி காலை எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று மாலை ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பேனரில் வந்த தகராறு: இந்நிலையில் பாஜக ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருவருக்குமே ஆதரவும் தராமல் தேர்தலிலும் களமிறங்காமல் அமைதி காத்தது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனையில் கூட்டணியின் பெயர் பேனரில் மாற்றப்பட்டது. பின்னர் இறுதியாக அதிமுக தலைமையிலான கூட்டணி என்று பேனர் வைக்கப்பட்டது
இந்நிலையில் பிப்.,3-ம் தேதி ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அதில் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் கையெழுத்திட தயார் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை எனவும்; அதில் வேட்பாளர் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
இடைதேர்தலில் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம் என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்தினால் ஆதரவளிப்போம் என்றும், இணைவதற்கு ஓபிஎஸ் தயாராக இருந்தபோதிலும் ஈபிஎஸ் தான் இணைய மறுக்கிறார், அதிமுக பிரிவதற்கு ஈபிஎஸ் தான் காரணம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசுவை வேட்பாளராக பரிந்துரைத்து உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயரே பொதுக்குழு படிவத்தில் இல்லாததை ஓபிஎஸ் தரப்பினர் கண்டித்தனர்.
இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவருக்கே எங்கள் ஆதரவு, எடப்பாடி அணி வேட்பாளர் இரட்டை இலையில் போட்டியிட்டாலும் ஆதரவளிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்து வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவத்தை எடுத்துகொண்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். 2,639 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில்தான் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால், இரட்டை இலை சின்னம் மீண்டும் தேர்தலில் களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுகவின் சாமானிய தொண்டர்களுக்கு மகிழ்ச்சியே தரும் என நம்பலாம்.