சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இறுதியாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஓபிஎஸ் தரப்பினரை ஓரம் கட்டுவதற்கான முழு முயற்சியில் ஈபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளது. அன்று நடைபெற்ற பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து ஓபிஎஸ்சின் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்ளிட்டோரை ஈபிஎஸ் நீக்கினார். பொதுக்குழுவை நடத்தியது செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு அன்று நடந்த கலவரத்தில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. சமீபத்தில் அந்த வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கி திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக வங்கிகள் அங்கீகரித்துவிட்டது. இப்படி அனைத்திலும் வெற்றி கண்ட எடப்பாடி பழனிசாமி இறுதியாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றால் அதிமுக முழுமையாக எடப்பாடி வாசம் சென்று விடும் என கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஒரு ஜாதி கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டார் என தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களின் குரல்கள் ஒழிக்க தொடங்கின. இந்த விமர்சனத்தை உடைத்து அதிமுகவின் பொது தலைவராக நாம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் முக்கிய பொறுப்புகளை தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் வழங்கி வருவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி. உதயகுமாருக்கும் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, சி.விஜயபாஸ்கர் நெட்வொர்க் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளாகவும், ஓபிஎஸ்ஸின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
முக்கிய பொறுப்புகளை வழங்குவதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிருப்தியை சரி செய்ய முடியும் என ஈபிஎஸ் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதற்கு ஏற்ப ஒன்று ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுதல், மற்றொன்று தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் சமுதாயத்தினரை வைத்தே அங்கே சரிசெய்தல் போன்ற முயற்சியிலும் ஈபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இதனால் தற்போது அதிமுகவில் தென் மாவட்ட பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கு மற்றும் வட மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடையே பத்திரிகையாளர் மணி கூறுகையில், "தென் மாவட்டங்களை சரி செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது ஈபிஎஸ்சின் சரியான நகர்வாக பார்க்கிறேன். ஒரு ஜாதிக்குள் இல்லாமல் அதிமுகவின் பொதுத் தலைவராக வரவேண்டும் என ஈபிஎஸ் முயற்சி செய்கிறார். எப்படி தன்னுடன் இருக்கக்கூடிய நிர்வாகிகளை வழிநடத்தி செல்லப்போகிறார் என்பது ஈபிஎஸ்க்கு சவாலான ஒன்றாகும். அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவகாரம் நீண்ட நாள்கள் செல்லும் என நினைத்தேன். ஆனால் 10 நாள்களில் சீலை அகற்றி ஈபிஎஸ் கையில் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது ஈபிஎஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அதிமுகவில் சீல் அகற்றப்பட்ட நாள், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சினிமா பின்புலம் இல்லாமல் ஒரு ஆளுமையாக அதிமுகவில் வழிநடத்த கூடிய ஒரு தலைவராக ஈபிஎஸ் வளர்ந்திருப்பது ஒரு மைல்கல்லாக பார்க்கிறேன்" என கூறினார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய சவால்கள் எதிர்நோக்கியுள்ளது. அனைத்து தடைகளையும் உடைத்து எதிர்காலத்தில் வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம்!