சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளங்கலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நடத்தி வருகிறது.
இந்த கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 431 கல்லூரிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிறப்புப்பிரிவினருக்கு 20, 21ஆம் தேதி கலந்தாய்வும், சிறப்புப் பிரிவினருக்கு 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் விளையாட்டுப்பிரிவில் 89 மாணவர்கள் தகுதிபெற்றனர். அவர்களில் 87 மாணவர்கள் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அதில் 35 மாணவர்கள் இடங்களை தேர்வுசெய்துள்ளனர். மாற்றுத்திறனாளி பிரிவில் தகுதிபெற்ற 29 பேரில் 21 மாணவர்கள் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்த நிலையில், அவர்கள் அனைவரும் இடங்களை தேர்வு செய்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளில் 3 பேரில் 2 பேர் இடங்களை தேர்வுசெய்துள்ளனர்.
சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதிபெற்ற 215 பேரில் 151 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 150 இடங்களும் உள்ளன. அதற்கு 1,039 பேரில் 972 பேர் விருப்பங்களைப் பதிவு செய்தனர். அதில் 138 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
விளையாட்டுப்பிரிவில் உள்ள 500 இடங்களுக்குத் தகுதியான 1,260 மாணவர்களில் 1,057 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 321 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவினை தேர்வுசெய்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு