சென்னை: தமிழ்நட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 1,56,278 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14ஆயிரத்து 524 பேரில் 13,893 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 12,996 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் சுற்றுக் கலந்தாய்வு குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியுள்ளதாவது, 'தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் சுற்றுக்கலந்தாவில் பங்கேற்க 14,546 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9,218 பேருக்கு 63.4 விழுக்காடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் 14,788 பேர் அனுமதிக்கப்பட்டு, 10,148 பேருக்கு 68.62 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 5.22 விழுக்காடு மாணவர்கள் இடங்களை குறைவாக தேர்வுசெய்துள்ளனர். கலந்தாய்வில் செய்துள்ள மாற்றத்தால், காலி இடங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
கடந்தாண்டு முதல் சுற்றுக் கலந்தாய்வில் 223 கல்லூரிகளில் ஒரு இடங்களையும் மாணவர்கள் எடுக்காமல் இருந்தனர். ஆனால் நடப்பாண்டில் 269 என கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நடப்பாண்டில் 20 கல்லூரிகளில் 30 விழுக்காடு இடத்திற்கு மேல் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு 22 கல்லூரியாக இருந்தது. 10 விழுக்காடு இடங்களில் 37 கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். கடந்தாண்டில் 40 கல்லூரில் 10 விழுக்காடு இடங்களை தேர்வு செய்திருந்தனர்.
மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, சிறந்த கல்லூரி, வேலை வாய்ப்பு, வசதிகள், ஆசிரியர்கள், கற்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை கவனித்து சேர்கின்றனர். முதல் சுற்றுக் கலந்தாய்வில், கம்ப்யூட்டர் அறிவியல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், இசிஇ, ஆர்டிபிசியல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் ஆகியவற்றில் மாணவர்கள் அதிகளவில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவினை மாணவர்கள் மிகவும் குறைவாக தேர்வுசெய்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் அளிக்கப்படும் சிவில், மெக்கானிக்கல் தமிழ் பாடப்பிரிவினையும் மாணவர்கள் மிகவும் குறைவாக தேர்வு செய்துள்ளனர். செராமிக், ரப்பர் பிளாஸ்டிக், டெக்ஸ்டைல்ஸ், பெட்ரோலியம் மற்றும் தோல் தொழில்நுட்பம் ஆகிய சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவையும் அதிகம் மாணவர்கள் விரும்பவில்லை.
முதல் சுற்றுக்கலந்தாய்வில் எஸ்எஸ்என், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், எம்ஐடி, சிஇசிஆர்ஐ (மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்), சென்னை தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 5 கல்லூரிகளில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது. முதல்முறையாக தனியார் கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கையில் முதலிடம் பெற்றுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் - அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் கையெழுத்தானது