மூளையில் நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில், ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி நோய் முதல் இடத்திலும், ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று! ஆனால், பார்கின்சன் பலருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பார்கின்சன் பாதிப்பை நடுக்குவாதம் என அழைக்கின்றனர்.
பார்கின்சன், நரம்பு மண்டலத்தின் தசை இயக்கத்தைப் பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை, கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.
நிற்பது, நடப்பது, பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இத்தகைய கொடிய நோய்க்கு, தற்போது வரை விஞ்ஞானிகளால் தீர்வுகாண முடியவில்லை.
இந்நிலையில், பார்கின்சன் நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதன்மூலம், நோய்ப் பாதிப்புக்குத் தீர்வு கொண்டுவர முடியும் எனக் கூறப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மூளை செல்களில் ஆற்றல் குறைபாடு ஏற்படுவதுதான் பார்கின்சன் நோய்க்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, முறையான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் பார்கின்சன் நோயைக் குணப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த தெளிவான மாதிரியை ஐ.ஐ.டி. மெட்ராஸின் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் வி. சீனிவாச சக்ரவர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ், ஐஐடி மெட்ராஸில் பிஹெச்டி முடித்த டாக்டர் விக்னயானந்தம் ரவீந்தர்நாத் உருவாக்கினார். இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச இதழான நேசர் சைன்டிஃப்பிக்கில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், பார்கின்சன் நோய்ப் பாதிப்பால் அவதிப்படுவோருக்கு, உயர்தர சிகிச்சையளிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி ஆர்வலர்களுக்கு 'ஸ்மார்ட் டெஸ்ட் சீரிஸ்' - ஐஐடி மெட்ராஸின் புதிய முயற்சி!