சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று (12.04.2023) மதியம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.
அப்போது இரண்டாம் டவர் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென பெரிய ஏசி ஒன்று திருநாவுக்கரசு தலையில் விழுந்துள்ளது. இதில் திருநாவுக்கரவின் தலையில் பலமாக அடிப்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த திருநாவுக்கரசை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் தமிழக அரசு தலையிட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இனி அரசு கட்டடங்களில் இப்படியான அலட்சிய போக்கை கண்டித்தும் இனி இச்சம்பவங்கள் போண்று நடக்காதவாறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் ஏசி பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது தவறுதலாக கையாண்டு கீழே விழுந்ததா அல்லது கழண்டு விழுந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக 304 A ( அஜாரக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல்) என்ற பிரிவின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்ட நபர் கைது!