ETV Bharat / state

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 82 யானைகள் இறப்பு.. வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 3:21 PM IST

Elephant Deaths in Tamil Nadu: தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 82 யானைகள் இறந்துள்ள நிலையில், யானைகள் எவ்வாறு இறக்கின்றன என்பது பற்றியும், யானைகளின் இறப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி.

Elephant Death details in Tamil Nadu 2023 by TN Forest dept Source
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் 82 யானைகள் இறந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் 82 யானைகள் இறந்துள்ளது என தமிழ்நாடு வனத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காடு வளமாக இருப்பதற்கு யானைகளின் பங்கு மிக முக்கியமாக அமைகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும்.

காடுகள் அழிந்தால் விலங்குகள், மனிதர்கள் வாழவே முடியாது. உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து யானைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களையும், முகாம்களையும் அமைத்து வருகின்றன.

யானைகள் பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்கூட்டத்தில் பொதுவாக 8 முதல் 15 யானைகள் இருக்கும். அந்தக் கூட்டத்தை வழிநடத்துவது, வயது முதிர்ந்த 40 அல்லது 50 வயதுடைய பெண் யானை ஆகும்.

ஒரு யானை இறக்கும் செய்தியை, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் நாம் சுமார் 80 முறைக்கும் மேல் கேட்டு இருப்போம். அதாவது, ஒரு மாதத்திற்கு 5-லிருந்து 6 யானைகள் சராசரியாக இறந்துள்ளன. இதில் இயற்கை மரணம், மனிதத் தவறுகள், ரயில் விபத்துகள், மின்சார வேலி போன்றவையும் அடங்கும். 10 யானைகள் இயற்கை மரணம் இல்லாமல் இறந்துள்ளன.

இது குறித்து வனவிலங்கு குற்றவியல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் இறந்துதான் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளால் யானைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், வனத்துறையில் இருக்கும் அதிகாரிகள், வனத்துறை கல்வி படித்த நபர்களாக அதிக அளவில் இல்லை. இதனால் வனத்தைப் பற்றியும், வனவிலங்கு குறித்தும் அவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இது குறித்து யானை ஆர்வலர் எஸ்.சந்திரசேகர் கூறுகையில், "இது வரையிலும் எத்தனை யானைகளுக்கு ரேடியோ காலர் அணிவித்து, அதில் எத்தனை யானை உயிருடன் உள்ளது? யானைகளைக் கண்காணிப்பதற்கான குழு இதுவரை அமைக்கப்படவில்லை. தொடர்ந்து யானைகளை வனத்துறை கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஓசை.காளிதாசன் கூறுகையில், "வனவிலங்கு இறப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், அதன் பிறப்பு எண்ணிக்கையை வைத்துதான் நாம் பார்க்க வேண்டும். பிறக்கும் எல்லா உயிர்களும் இறக்கத்தான் செய்யும். அது இயற்கை மரணமாக இருப்பதில் தவறில்லை.

ஆனால், மனிதர்களால் அந்த விலங்கின் இறப்பு இருக்கக்கூடாது. இதில், எத்தனை இயற்கை மரணங்கள், எத்தனை செயற்கை மரணங்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். மனிதர்களால் ஏற்படும் யானைகளின் மரணத்தில் முதன்மையாக இருப்பது மின்வேலியில் அடிபட்டு இறப்பதுதான்.

மேலும், விவசாயிகளுக்கு யானைகளைக் கொல்வது நோக்கம் இல்லை. அவர்கள் பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கம் உடையவர்கள். மேலும், இப்படி மின்வேலி வைப்பதால் யானைகள் மரணம் அடைகின்றன. இதைத் தடுக்க, சூரியசக்தி உடைய மின்வேலி அமைத்தால், இதுபோல மரணங்கள் தடுக்கப்படும்.

மேலும், ஒரு யானை காட்டை விட்டு வெளியில் வந்தால், அது யானைகளுக்கும் ஆபத்து, மனிதர்களுக்கும் ஆபத்து. யானைகள் வெளியில் வருவது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. உணவு, தண்ணீர் போன்றவற்றிற்கு யானைகள் வனத்தை விட்டு வெளியில் வருகின்றன. மேலும் காட்டின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. யானைக்கூட்டம் பயன்படுத்தக்கூடிய பாதைக்கு யானை வழித்தடம் (Elephant Corridor) என நாம் கூறுகிறோம்.

இப்படி யானைகளின் வழித்தடத்தில் அண்மைக் காலத்தில் பல கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், பல ரிசார்ட்கள் (Resorts) எனத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், இயல்பான வழித்தடத்தில் யானைகளின் வலசையை தொடர்ந்து தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை அரசு முறைப்படி, யானைகளின் வழித்தடத்தை மீட்டால், யானைகள் நகரத்துக்குள் வருவதை தடுக்கலாம். வேட்டைத் தடுப்பு முகாம்களை அதிகப்படுத்தினால், அனைத்து விலங்குகளையும் நாம் பாதுகாக்கலாம். யானைகளின் இயற்கை மரணத்தில் மறைமுகமாக இருப்பது மனிதத் தவறுகள். நெகிழி, கண்ணாடி பாட்டில்கள் போன்றவை மலை அடிவாரத்தில் விட்டுச்செல்வது போன்ற காரணங்களும், யானைகளின் இயற்கை மரணத்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

யானைகள் மரணம் 2023 தரவுகள்:

மாதம் இயற்கை மரணம்எதிர்பாராத மரணம்
ஜனவரி 4 0
பிப்ரவரி 7 1
மார்ச் 16 5
ஏப்ரல் 15 2
மே 6 0
ஜூன் 5 0
ஜூலை 2 0
ஆகஸ்ட் 5 1
செப்டம்பர் 6 1
அக்டோபர் 3 0
நவம்பர் 1 0
டிசம்பர் 2 0

இதையும் படிங்க: சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.