சென்னை கந்தஞ்சாவடி அருகே மின்சாதன பொருட்கள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது கடை அருகே மழைநீர் தேங்கியதை அடுத்து, அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.
பின்னர் மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் இருவரும் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர்களை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த தரமணி காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சகோதரியை அடித்துக்கொன்ற தம்பி: திருவள்ளூரில் பரபரப்பு