தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருமங்கலம் சாலையில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி சங்கீதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனம் ஓன்றை மடக்கி சோதனை செய்தபோது அதில் தனியார் நகை கடை ஊழியர்கள் 3 பேர் இருந்தனர். அவர்கள் திருமங்கலத்தில் உள்ள நகை கடையின் கிளையில் இருந்து தி.நகர் கிளைக்கு நகைகளை எடுத்து செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்ததில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த வாகனத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பொருட்களை பெற்றுச் செல்லுமாறு ஊழியர்களிடம் அறிவுறுத்திய அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்டவற்றை செனாய் நகர் மண்டல அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.