சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்ஸிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்ற பிறகும், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இருந்தன. இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈபிஎஸ் தரப்பினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். ஆனால், ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த சூழலில் கர்நாடகா தேர்தல் அறிவிக்கப்பட்டது. கர்நாடக தேர்தலை பயன்படுத்திக் கொள்ள நினைத்த எடப்பாடி பழனிச்சாமி, புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தினார். இதை காரணம் காட்டி, தேர்தலில் இரட்டை சின்னம் பெறுவதற்கு தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தம், நிர்வாகிகள் நீக்கம் போன்றவற்றை ஏற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நீதிமன்றங்களில் தொடர் ஏமாற்றங்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையம் இறுதி நம்பிக்கையாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த விவகாரம் ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?