தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. அதனால், திமுக, அதிமுக, அமமுக, மநீம., உள்ளிட்ட தமிழக கட்சிகள், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையின்போது, முக்கிய வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றனர். எதுகை மோனையில் மாற்றி மாற்றி குறையும் கூறி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் பரப்புரைக்கு வரும் வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டி அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் தமிழகத்தில் நட்சத்திர தொகுதியான மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பரப்புரை களைக்கட்டி வருகிறது. இத்தொகுதியில், திமுக சார்பில் தயாநிதி மாறன், பாமக சார்பில் சாம்பால், மநீம சார்பில் கமீலா நாசர், அமமுக சார்பில் தெஹ்லான் பாகவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் மத்திய சென்னை தொகுதியில்தான் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரால் தயாநிதிமாறன் தோற்கடிக்கப்பட்டார். அதனால், இத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றியை பெறுவதற்காக தயாநிதி மாறன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று காலை அண்ணா நகர் டவர் பார்க்கில் நடை பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த பொது மக்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி வாக்குகளை சேகரித்தார்.