உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையானது சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 75 மரங்களில் பெரும்பாலானவை வயதான மரம் என்பதால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றினால் மீண்டும் துளிர்ப்பதற்கு 20 முதல் 30 விழுக்காடு வாய்ப்புகள் மட்டும் இருக்கிறது.
அதனால் 75 மரங்களில் குறைந்தபட்ச மரங்களை மட்டும் இடமாற்றம் செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதியளித்த நீதிபதிகள், அதற்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் நிலை குறித்தும், புதிய மரங்கள் நடப்பட்டது குறித்தும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சூடி தந்த சுடர்க்கொடியை பாடி மகிழ்ந்த பக்தர்கள்!