சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த டிச.23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அளிக்கபட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு இந்த விடுமுறையானது இன்றுடன் நிறைவடைந்து நாளை (ஜனவரி-2) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
குறிப்பாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. அதனால் மாணவர்களை தேர்விற்கு தயாராக்கும் வகையில், வகுப்புகளை அமைத்து கொள்ளும்படி வகுப்பு ஆசிரியர்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(02/01/2023) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார். ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பல பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
அரையாண்டு விடுமுறைகள் முடிவுபெற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என சென்னையிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை(ஜன.2) பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் குறிப்பாக, பள்ளி வளாகம், பள்ளி வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, புயல் பாதிப்பினால் பள்ளி வளாகத்தில் விழுந்த மரக்கழிவுகள் அப்புறபடுத்தபட்டுள்ளதா என அனைத்தும் முறையாக இருக்கிறதா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மேலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் பாடபுத்தகங்கள் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு புதிதாக சீருடை மற்றும் பாடபுத்தகங்கள் வழங்கபடும் என அரசு தரப்பில் அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், நாளை (ஜன.2) பள்ளிகள் திறக்கப்படவுள்ள முதல் நாளே தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கபட்ட நெல்லை, கன்னியாக்குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதியப் பாடபுத்தகங்கள் மற்றும் புதிய இலவச சீருடை வழங்கபடவுள்ளது. மேலும், மழை காரணமாக ஒத்திவைக்கபட்ட அரையாண்டு தேர்வினை நடத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்த விபத்தில் 4 பெண்கள் மரணம் - உறவினர்கள் கூறுவது என்ன?