சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.
இது குறித்து அன்பில் மகேஷ் கூறுகையில், "பிளஸ் 2 தேர்வில் எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிபெற்றதில் மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 500 பேர் மாணவர்கள், நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 973 பேர் மாணவிகள் உள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரே மதிப்பெண் பலருக்கு கிடைப்பதால் ஏற்படும் போட்டியைத் தவிர்க்க முதல் முறையாக தசம மதிப்பில் பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. தனித்தேர்வர்களுக்கு கரோனா சூழலைப் பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.