சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், பூத் கமிட்டிகள் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் முழுமையாகப் பல மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் எனவும், பூத் கமிட்டிகள் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (ஜனவரி 09) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களவை தேர்தலில் கண்டிப்பாகக் கூட்டணி அமைப்போம்.
கூட்டணி முடிவுகளைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் அதிமுக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கக்கூடிய முதல் தேர்தல் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
இதனால், மக்களவைத் தேர்தலில் வெற்றியைக் குறிவைத்து எந்தெந்த தொகுதிகளில் யாரையெல்லாம் வேட்பாளர்களாக நிறுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகளையும், அதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள சில உத்தரவுகளையும் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.