சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு அளித்தார்.
அப்போது அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொய் வழக்கு
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து, அதனை மறைக்க எங்கள் மீது பொய்யான வழக்குகளை போட்டு வருகிறது.
திமுக பொறுப்பேற்ற 100 நாள்களில் மக்கள் வேதனையும், சோதனையும் அடைந்துள்ளனர். கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட நலத்திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளது.
திட்டங்கள் முடக்கம்
கிராமப்புற பகுதிகளில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை முடக்கி வைத்துள்ளார்கள். கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை முடக்கி திமுக சாதனை படைத்துள்ளது. திமுகவை சேர்ந்த 13க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வேளையில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.
அதிமுக தொண்டர்கள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் மீது திமுகவினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள். கோடநாடு வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்கள்.
குற்றப் பின்னணி
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றம்சாட்டபட்ட குற்றவாளிகள் அனைவரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள், அவர்களுக்கு ஏன் திமுக பாடுபடுகிறது.
திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடி வருகிறார். அரசு குற்றவாளிகளை தண்டிக்காமல் ஏன் காப்பாற்ற நினைக்கிறது. சாட்சிகள் விசாரணை நிறைவடைந்து. இறுதி கட்ட விசாரணை நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு ரத்து
அரசியல் காழ்புணர்ச்சி உடன், நேரடியாக அரசியல் செய்ய முடியாமல் குறுக்கு வழியில் இவ்வாறு ஈடுபடுகிறார்கள். தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என மக்களிடம் கூறினார்கள். ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதே நேரத்தில் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் செய்கிறார்கள்.
கோடநாடு வழக்கில் சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்து. நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வரும் வேளையில் எந்த நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்? ஏற்கனவே இது தொடர்பான வழக்கை உடனடியாக முடித்து வைக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் பாஜகவின் எல்.முருகன், திமுகவின் மா.சுப்பிரமணியன் - நடந்தது என்ன?