சென்னை: தமிழ்நாடு அரசு சொத்து வரி உயர்வு குறித்து நேற்று (ஏப். 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.
எனவே, நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர் தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?