சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 14) காணொலி வாயிலாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், "சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண்ணில், தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம்.
சங்கம் வளர்த்த மதுரை
அதில் முதன்மையானது, சங்கம் வளர்த்த மதுரையில் கருணாநிதி பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப் போகிறதுதான். 114 கோடி ரூபாய் மதிப்பில் அது கட்டப்பட இருக்கிறது. 2.70 ஏக்கர் நிலத்தில், இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி கட்டடப் பரப்பில், எட்டு தளங்களுடன் அமையப் போகிறது.
மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதி ஏற்கனவே இருக்கின்ற பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை மேம்படுத்தவும், 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.
அதிமுக ஆட்சியின் லட்சணம்
மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்துவருகிற போக்குவரத்தைக் கருத்தில்கொண்டு, 100 கோடி ரூபாய் மதிப்பில் வைகை ஆற்றின் வடகரையில் இருக்கிற சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்துவதற்கும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில், மதுரையை லண்டன் ஆக்கப் போகிறோம், சிங்கப்பூர் ஆக்கப் போகிறோம் என்று அப்போதைய அமைச்சர்கள் சிலர் நித்தமும் பேட்டி கொடுத்தார்கள். ஆனால், ஏற்கனவே இருந்த மதுரையையும் இன்னும் கொஞ்சம் சீரழித்துவிட்டுப் போனதுதான் அவர்கள் ஆட்சியின் லட்சணம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எவ்வாறு சென்னையை வெள்ளத்தில் மூழ்க வைத்தார்களோ, அவ்வாறுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை ஊழலில் மூழ்கடித்தார்கள். பன்னீர்செல்வம், பழனிசாமி மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறந்திருக்கலாம். ஆனால் மதுரை மக்கள் மறக்கவில்லை.
விஞ்ஞானி செல்லூர் ராஜு
மதுரை வைகை நதியை, லண்டனின் தேம்ஸ் நதிபோல மாற்றுவோம் என்றும்; மதுரையை சிட்னி நகரைப்போல மாற்றுவோம் என்றும்; மதுரையை ரோம் நகரைப்போல மாற்றிவிடுவோம் என்றும்; விஞ்ஞானி செல்லூர் ராஜு சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை.
2024ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஒரே நாடு - ஒரே தேர்தல் வரப்போகிறது என்று ஆருடம் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான், இதெல்லாம் தெரியும் போல! கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி.
கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்
பழனிசாமி அவர்களே யாரை மிரட்டுகிறீர்கள், மிரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே இந்த இரண்டு நாளா! மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினையே உங்களால் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!
சசிகலாவின் காலைப் பிடித்து பதவியைப் பெற்று, டெல்லிக்கு காவடி எடுத்த சுயநலத்தின் மொத்த உருவம்தான் நீங்கள்!
சசிகலாவைப் பார்த்தால் பயம், பன்னீர்செல்வத்தைப் பார்த்தால் பயம், டெல்லியைப் பார்த்தால் பயம், கொடநாடு பங்களா என்று சொன்னாலே பயம் என்று அஞ்சி நடுங்கி வாழும் பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பார்த்துப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
பழனிசாமியின் இதுபோன்ற பொறுப்பற்ற ஆணவப் பேச்சுகளுக்கு, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மலரட்டும் நம்ம ஆட்சி
மதுரை மக்களாகிய நீங்கள் கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து முழுமையான வெற்றியைத் தர வேண்டும்.
நல்லாட்சிக்குத் துணைநிற்க வேண்டும். மதுரைக்கு மேலும் மேலும் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும். உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி!" இவ்வாறு அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: ‘அரபிக் குத்து’ லிரிக்கல் வீடியோ - உற்சாகத்தில் ரசிகர்கள்